'ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை' எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
‘ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை’ என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுக்குழுவில் 2 ஆயிரத்து 500 பேர் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினோம். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.
வாய்ப்பு இல்லை
சட்ட விதிகளின்படி 2 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்து முடிவு எடுத்தது. இதனால் அவர் இணைவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும்.
அ.தி.மு.க. குறித்து பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. தி.மு.க. பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள் எப்போதும் தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பார்கள். ஆனால் அவர்களே இப்போது தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.