மழைநீர் தேங்கிய பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்

சென்னை முகலிவாக்கத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டார்.

Update: 2022-11-14 22:48 GMT

சென்னை,

சென்னை புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர், பெல்நகர் ஆகிய பகுதிகளை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள், போர்வைகள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின் மற்றும் நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தவறான செய்தி

சென்னையில் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்கவில்லை என்று தி.மு.க. அரசு சொல்லிவருகிறது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மூலம் வெள்ளநீர் முழுவதும் வடிந்துவிட்டதாக தவறான செய்தியை அரசு தெரிவித்து வருகிறது. கொளப்பாக்கம் கணேஷ்நகர், திருவள்ளுவர் நகர், மணப்பாக்கம், ராஜலட்சுமி அவென்யூ, மதனந்தபுரம் பகுதிகளில் வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். படகு மூலமாகத்தான் வீடுகளுக்கு சென்று வருகிறார்கள்.

இந்த பகுதிகளில் அமைச்சர்களோ, முதல்-அமைச்சரோ வந்து பார்க்கவில்லை. உடனடியாக இந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மழைநீரை வெளியேற்ற வேண்டும்.

மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதா?

இப்போதுதான் மிதமான மழை பெய்து வருகிறது. சாதாரணமாக 5 செ.மீ. வரை மழை பெய்தாலே தானாக வடிந்துவிடும். இதை வைத்துக்கொண்டு நாங்கள் சாதனை செய்துவிட்டோம் என்று ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் 30 முதல் 40 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. அந்த மழை இப்போது பெய்திருந்தால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.

அ.தி.மு.க. ஆட்சியில் 2,400 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் பணிக்காக ஆசிய வங்கியின் ரூ.3,500 கோடி நிதி உதவியுடன் பணிகள் திட்டமிடப்பட்டு 1,240 கி.மீ. வரை பணிகளும் முடிந்தன. ஜெர்மன் நிதி நிறுவனத்தில் இருந்தும் ரூ.1,300 கோடி நிதி உதவி பெற்றோம். அதனை இந்த அரசு ரத்து செய்துவிட்டு, அதில் இருக்கும் ரூ.300 கோடியை சிங்கார சென்னை திட்டத்துக்காக பயன்படுத்தினார்கள்.

காப்பீட்டு தொகை

அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளைதான் இவர்கள் செய்து வருகிறார்களே தவிர, புதிதாக நிதியை பெற்று எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

மழையை வைத்து அரசியல் செய்வதாக என் மீது குற்றம் சாட்டும் மு.க.ஸ்டாலின், இதற்கு முன்பு என்ன செய்தாராம்? இன்னும் மழைக்காலம் முடியவில்லை. கனமழை இருக்கிறது. சீர்காழி, கடலூர், மயிலாடுதுறை உள்பட அனைத்து இடங்களிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க உள்ளோம். தி.மு.க. அரசு தூக்கத்தில் இருந்து எழுந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து உரிய காப்பீட்டு தொகையை பெற்றுத்தருவதுடன், மாநில அரசும் ஒரு தொகையை நிவாரணமாக அறிவிக்க வேண்டும்.

பரோல்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக வந்தபிறகு, அமைச்சரவை கூடி நளினி, பேரறிவாளன் உள்பட அனைவருமே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை கவர்னரிடமும் அனுப்பிவைத்தோம். அது காலதாமதம் ஆனது.

பேரறிவாளனுக்கு பரோல் கூட கிடைக்காத நிலை இருந்தது. நான் தான் பரோல் வழங்க உத்தரவிட்டேன். அதற்கு முன்பு அவரை யார் விட்டது? அந்த துணிச்சல் அ.தி.மு.க.வுக்கு மட்டும் தான் உள்ளது. தி.மு.க. எப்போதுமே இரட்டை வேடம் போடும். எதையும் செய்யாமல் செய்தது போலவே காட்டிக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்