"ஓ.பன்னீர் செல்வம் குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும்" - செல்லூர் ராஜூ
ஓ.பன்னீர் செல்வத்தை இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "உண்மையான அதிமுக எடப்பாடி பழனிசாமி தலையிலான அணிதான். அதிமுகவை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிக்கு ஓ.பன்னீர் செல்வம் துணைபோகிறார். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைத்துக் கொள்வது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செய்ய வேண்டும்.
முடிவு எடுப்பதற்கு அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி திரும்பி வர வேண்டும். ஒ.பன்னீர்செல்வத்தின் இதுபோன்ற செயல்பாடுகள் எரிச்சலைத்தான் உருவாக்கும். ஆரம்பம் முதலே தொண்டர்களும், நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்குதான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஊடகங்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. ஆதலால் மக்களின் மனநிலை முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை. தமிழ்நாடு அரசாங்கம் 12 மணிநேர வேலை நேரத்தை கொண்டுவருவது கண்டிக்கதக்கது. தூங்கா நகரமான மதுரை குப்பை நகரமாக மாறியுள்ளது. மாநகராட்சி மேயர் எந்த திட்டத்துக்கும் நிதி ஒதுக்கவில்லை. பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி தருவது அல்ல. சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. சபாநாயகர் ஆசிரியர் போன்று செயல்படுகிறார். சட்டமன்றம் கேலி கூத்தாக உள்ளது" என்று அவர் கூறினார்.