நாடாளுமன்ற தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருகிறார்-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினபேச்சு

நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் சிறுபான்மையினர் மீது பாசம் காட்டுவது போல் எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருகிறார் என்று திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க.வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-10-22 18:45 GMT

நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் சிறுபான்மையினர் மீது பாசம் காட்டுவது போல் எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருகிறார் என்று திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க.வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

பயிற்சி பட்டறை

திருவண்ணாமலை அருகே மலப்பாம்பாடி ஊராட்சியில் நேற்று மாலை தி.மு.க. சார்பில் வடமண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

கூட்டத்தில் தி.மு.க. பொது செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ள பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

யாராலும் பிரிக்க முடியாது

நாடாளுமன்ற கதவு நமக்காக காத்து இருக்கிறது. வெற்றி கனியை பறிக்க தேர்தல் பணிக்கான தொடக்க பணியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்காக பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி, ராமநாதபுரம், திருப்பூருக்கு பின்னர் வடக்கு மண்டல மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் திருவண்ணாமலையில் நடத்தப்பட்டு உள்ளது. ஒளி மிகுந்த ஊரில் உங்கள் முகங்களை பார்க்கும் போது உதய சூரியனை பார்ப்பது போன்று உள்ளது. உங்களை பார்க்கும் போது புதியதோர் உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படுகிறது.

ஒரு நாள், ஒரு வாரம் என முழுவதும் உழைத்திட்டாலும் மறுநாள் கழக உடன்பிறப்புகளுடன் இருக்க போகிறோம் என்ற எண்ணம் வரும். புதிதாக ஒரு எனர்ஜி வரும். நீங்கள் என்னுடைய 'சீக்ரட் ஆப் மை எனர்ஜி'. திருவண்ணாமலையும், தீபமும் போன்றுதான் திருவண்ணாமலையும், தி.மு.க.வையும் யாராலும் பிரிக்க முடியாது.

நூற்றாண்டு விழா

தி.மு.க. உருவான போது நடந்த பொதுக்கூட்டத்தில் ரூ.1451 வசூலானது. அதில் ரூ.100-ஐ இதே திருவண்ணாமலையை சேர்ந்த பா.உ.சண்முகம் வழங்கினார். 1951-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாம் முதல் முதலாக போட்டியிடுகிறோம். அதில் 15 பேர் வெற்றி பெற்றோம்.

அந்த 15 பேரில் பா.உ.சண்முகம், சந்தானம், களம்பூர் அண்ணாமலை என 3 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். முதல் நாடாளுமன்ற தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒருவர் திருண்ணாமலை தொகுதி. அவர் இரா.தர்மலிங்கம். அப்படிப்பட்ட பா.உ.ச. மற்றும் இரா.தர்மலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் எ.வ.வேலுவின் சீரிய முயற்சியினால் மாவட்ட தி.மு.க. சார்பில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்புமுனை

தி.மு.க.விற்கு திருப்புமுனையை தந்தது 1963-ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற இடைத்தேர்தல் தான். அந்த வெற்றி தான் 1967-ல் தி.மு.க. ஆட்சி அமைக்க அடித்தளமாக இருந்தது.

அதேபோல் 2021-ம் ஆண்டு தேர்தலின் போது நமது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டம். அந்த பயணத்தை திருவண்ணாமலையில் இருந்து தான் தொடங்கினேன். அதன் பின்னர் தொகுதி, தொகுதியாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினேன். ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று கூறினேன். ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் நிச்சயமாக நிறைவேறும் என்று லட்சக்கணக்கான மக்கள் மனு அளித்தனர்.

தி.மு.க.வின் வெற்றி தீபத்தை பெற்றதற்கு அடித்தளமாக அமைத்த ஊர்தான் திருவண்ணாமலை என்பதை பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.

தேர்தல் பணி

இந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு எழுச்சியுடன் நடத்தியதற்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். எதையும், யாரும் ஏவாமலே செய்யக்கூடியவர் வேலு என்று தலைவர் கருணாநிதி பாராட்டினார். திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் பல்நோக்கு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இவையெல்லாம் எவ்வாறு அமைய வேண்டும் என்று எனது எண்ணத்திற்கு ஏற்ப அமைத்தவர் தான் வேலு. கழகத்தினுடைய விழா வேந்தர் என்று கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது நான் கூறினேன். அவருக்கு தோளோடு தோள் கொடுத்து பணியாற்றும் நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த மார்ச் மாதம் அண்ணா அறியவலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினோம். அதில் இருந்து நம்முடைய தேர்தல் பணியை தொடங்கி உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்து வருகிறோம். இதோடு 4 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நடத்தி முடித்து உள்ளோம். இன்னும் சென்னை மண்டலம் தான் பாக்கி உள்ளது.

வெற்றிக்கும் பொறுப்பாளர்கள்

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பல கட்ட ஆய்வுக்கு பிறகு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள், கடமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கும் பொறுப்பாளர்கள் என்பதை மறந்து விட கூடாது. உங்களை நம்பி தான் 40-ம் நமதே, நாடும் நமதே என்று கம்பீரமாக சொல்லி வருகிறேன். வெற்றி ஒன்று தான் உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும். பொறுப்பாளர்கள் தங்களின் வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது முதல் பணி. நம்முடைய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்வது 2-வது பணி. வாக்காளர்களை வாக்களிக்க வைப்பது 3-வது பணி.

ஆட்சி மீது நம்பிக்கை

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கழகத்திற்காக தினமும் 1 மணி நேரம் ஒதுக்க வேண்டும். பொறுப்பாளர்கள் அவர்கள் பகுதியில் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தில் ஒருவராக மாற வேண்டும். வாக்காளர்களின் முழு விவரங்களை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். வாக்காளர்களின் தேவைகளுக்கு உதவுங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து, பார்த்து நாம் செயல்படுத்தி வருகிறோம். இதனால் மக்கள் நமது ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்.

அச்சம் அடைய செய்துள்ளது

ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினால் பெண்கள் நம்மை ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர். ஆளும் கட்சியினர் மட்டுமின்றி நம்மை எதிர்ப்பவர்களும் தற்போது பாராட்டுகின்றனர். இது நமது எதிரிகளை அச்சம் அடைய செய்து உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. வயிற்றெரிச்சலில் மாற்றி, மாற்றி உளறுகிறார். அவர் பொய்களை பேசி வருகிறார். அவர் சொன்னதிலேயே பெரிய பொய் என்னவென்றால் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் நாம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறோம் என்கிறார். நான் கேட்கிறேன் பெண்களுக்கான விடியல் பயணம் திட்டம், இலவச பஸ் பயணம் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டம், இந்த திட்டங்களை யார் கொண்டு வந்தது. நாங்கள் கொண்டு வந்த திட்டம். அனைத்தும் எடப்பாடி பழனிசாமி கனவில் நடந்ததா? ஆட்சிக்கு வந்து 1000 நாட்கள் கூட ஆகிவில்லை/ 1000 கோவில்கள் குடமுழுக்கு நடத்தியுள்ளோம், 4 ஆண்டு ஆட்சி காலத்தில் அ.தி.மு.க. எத்தனை நடத்தி உள்ளார்கள். விவசாயி என்று விவசாயிகளிடம் சென்று விவசாயியாக நடிக்கும் போலி பழனிசாமிக்கு எப்படி தெரியும்.

குடும்ப கட்சி

குட்கா வழக்கில் அ.தி.மு.க. அமைச்சர் கைது செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து தோற்றவர் பழனிசாமி. தி.மு.க.வை குடும்ப கட்சி என்கிறார்கள். தி.மு.க. குடும்ப கட்சி தான். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கும் கட்சி தி.மு.க. கட்சி தான். அதனால் தி.மு.க. குடும்ப கட்சி தான். பா.ஜ.க. கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அ.தி.மு.க. நாடகம் ஆடி வருகிறது. சிறுபான்மையினர் மீது திடீரென பாசம் பொங்குது. தேர்தல் வருவதால் நாடகமாடி வருகிறார்.

தேர்தல் களம் என்பது போர் களம். அந்த காலத்தில் அதிக போர்களில் வெற்றி பெற்ற மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். தற்போது நாம் இந்திய ஜனநாயகத்தை காக்க கூடிய போர்களத்தில் நிற்கிறோம்.

தலைசிறந்த நாடாக திகழும்

இந்த தேர்தல் களத்தில் நாம் பெறக் கூடிய வெற்றி தான் எதிர்கால இந்தியாவிற்கு மிக, மிக முக்கியம். திராவிட மாடல் கோட்பாடானது இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்பட்டால் உலகில் தலை சிறந்த நாடாக இந்தியா திகழும்.

மக்களை பிளவுப்படுத்தி அடிமைப்படுத்த கூடிய பாசிச காரர்களுக்கு இந்த தேர்தல் களத்தில் திருவண்ணாமலை பாசறை கூட்டம் நல்ல வழிகாட்டியாக அமையும். தீபம் ஒளிர்வதை போல் இந்தியாவின் நம்பிக்கை ஒளி ஒளிர்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரியில் 600 அதிநவீன படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

அதன்பின் திருவண்ணாமலை நகர தி.மு.க.செயலாளர் கார்த்திவேல் மாறன்-நகர்மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் வே.காமினி-எஸ்.ரகுநாத் ஆகியோரை வாழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்