மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் தி.மு.க. ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள்-சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள் என்று சேலத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-05 22:09 GMT

அ.தி.மு.க.வில் இணைப்பு

தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. முன்னாள் செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று அந்த கட்சியில் இருந்து விலகி சேலத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்காசியை சேர்ந்த அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் அ.ம.மு.க.வில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகி தற்போது முதற்கட்டமாக அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். மேலும் 10 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா தென்காசியில் விரைவில் நடைபெற உள்ளது.

பொதுச்செயலாளர் தேர்தல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளதை தெரிவித்துள்ளோம். இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு, பொதுச்செயலாளர் தேர்தலை தற்போது நடத்தக்கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் தடை விதிக்கவில்லை. நாங்களும் வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டங்களை தான் தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பெரியதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. கோவையில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 133 திட்டப்பணிகளுக்கு 11 முறை ஒப்பந்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. அதற்கு காரணம் கமிஷன் அதிகம் கேட்பதாக கூறுகிறார்கள்.

நிம்மதியாக இல்லை

2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மின் கட்டணம் 53 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சொத்துவரி 100 சதவீதம், கடை வாடகை 150 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் ஏற்கனவே பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் மின்கட்டணம், சொத்துவரி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் நிம்மதியாக இல்லை. துன்பமும், வேதனையையும் அனுபவித்து வருகிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான முதல் கையெழுத்து போடுவோம் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்தார்கள். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்தார்களா? அதற்காக அவர்கள் எந்த போராட்டமும் நடத்தவில்லை. நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களா? ஆனால் காவிரி பிரச்சினையில் தமிழக உரிமைக்காக அ.தி.மு.க. சார்பில் குரல் கொடுத்து 22 நாட்கள் நாடாளுமன்ற அவையை முடக்க செய்தோம். ஆனால் நீட் தேர்வுக்கு தி.மு.க.வினர் எந்த குரலும் எழுப்பவில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, இசக்கி சுப்பையா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்