கரும்பு கொள்முதலின் முறைகேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-01-05 07:18 GMT

சென்னை,

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தைப் பொங்கலுக்காக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பை சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில், பொங்கலுக்கு செங்கரும்பு வழங்கப்படமாட்டாது என்று இந்த விடியா அரசு அறிவித்ததையொட்டி, வருகின்ற தைப் பொங்கலுக்கு, அம்மாவின் ஆட்சிக் காலத்தில் வழங்கியதைப் போல், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முழு செங்கரும்பு வழங்க வேண்டும் என்றும், செங்கரும்பை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதேபோல், செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தினர்.

இந்த அரசு எங்களது தொடர் கோரிக்கையை அடுத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், ஒரு கரும்பு ரூ. 33 வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக ரூ. 72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.33. ஆனால், இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு ரூ. 15 முதல் 18 வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை இந்த அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான ரூ.33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

அரசு அறிவித்த கரும்புக்கான முழு தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், பொறுப்புள்ள எதிர்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும், அதிமுக சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசை எச்சரிக்கை செய்கிறேன்.

கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற அரசின் விவசாய விரோத செயல்களுக்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்