எடப்பாடி பழனிசாமி பட்ஜெட்டை படிக்காமல் கருத்து சொல்கிறார்; அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

யார், யார் மகளிர் உரிமை தொகை பெற முடியும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும், இதை எடப்பாடி பழனிசாமி முழுவதுமாக படிக்காமல் கருத்து தெரிவித்து உள்ளார் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

Update: 2023-03-20 23:26 GMT

சென்னை,

தேர்தலில் கொடுக்கப்பட்ட 85 சதவீத வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார். மீதம் இருக்கும் 15 சதவீத வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருக்கிறார். மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு என்ன தகுதியை நிர்ணயிக்க போகிறார்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் கேட்டு இருக்கிறார். இந்த திட்டத்தில் யார், யார் மகளிர் உரிமை தொகையை பெற முடியும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை அவர் முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிகிறது.

ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வழங்க மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்து சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் உரிமைத்தொகை வழங்கும் மகத்தான திட்டத்தை முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு அறிவித்து விட்டது. தேர்தலில் கொடுக்காத வாக்குறுதியையும் நம்முடைய முதல்-அமைச்சர் நிறைவேற்றியிருக்கிறார்.

படிக்காமலே கருத்து தெரிவிக்கிறார்

கொரோனாவுக்கு முன்னால் அ.தி.மு.க. ஆட்சியில் எந்தெந்த திட்டத்தை நிறைவேற்றினார்கள், எந்தெந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார்கள். ஆனால் இந்த ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. படிக்காமலேயே எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்கிறார்.

ஈரோடு கிழக்கு மக்களை அடைத்து வைத்தார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். கூவத்தூரில் யார் அடைத்து வைத்திருந்தார். எவ்வளவு போலீசார் அங்கு இருந்தார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் பணிமனையில் இருந்தார்கள், வாக்கு சேகரித்து விட்டு இரவில் வீடு திரும்பினார்கள். அவரவர் அவர்கள் தொழிலை கவனித்துக்கொண்டார்கள். மக்கள் எல்லோரையும் சந்திக்க கூடிய நிலையில்தான் இருந்தார்கள். இது அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா?.

அவர்களுடன் (எடப்பாடி பழனிசாமியுடன்) செல்வதற்கு வாக்காளர்களுக்கு, மக்களுக்கு விருப்பம் இல்லை. யாரும் வரவில்லை என்ற விரக்தியில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகளை அவர் விமர்சித்து பேசியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்