11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் சிதம்பரத்தில் எம்எல்ஏக்கள் பேட்டி

11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சிதம்பரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர் கூறினர்.

Update: 2022-06-30 16:12 GMT

புவனகிரி, 

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் மீது வெறுப்பு

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். சட்டமன்றத்தில் கருணாநிதியை பாராட்டி பேசுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஓ.பன்னீா்செல்வம் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சியை எடப்பாடி பழனிசாமியால்தான் வழி நடத்த முடியும். கோர்ட்டுக்கும் போலீஸ் நிலையத்திற்கும் அலைந்த ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி தேர்தலில் காலியாக உள்ள பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான படிவத்தில் கையெழுத்து இடுகிறேன் என கூறி யாரையும் ஏமாற்ற முடியாது.

தி.மு.க.வும் வேண்டும், பா.ஜ.க.வும் வேண்டும், சசிகலாவும் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். அதை அ.தி.மு.க.வினர் ஏற்க மாட்டார்கள். எடப்பாடி பழிசாமி 100 சதவீதம் தி.மு.க.வை எதிர்க்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 66 பேரில் 63 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வர வேண்டும் என விரும்புகின்றனர். 2 ஆயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்களில், 2 ஆயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்களும், 75 மாவட்ட செயலாளர்களில் 70 மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்