பழனி முருகனுக்கு படைக்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எடப்பாடி பக்தர்கள்

எடப்பாடி பக்தர்களில், பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.;

Update:2024-01-31 14:43 IST

தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் மானூர் வழியாக வரும் அவர்கள், நாளை (வியாழக்கிழமை) பழனி சண்முகநதி பகுதிக்கு வர இருக்கின்றனர்.

அப்போது அங்கு மகாபூஜை நடத்திவிட்டு காவடிகளுடன் புறப்பட்டு பழனி முருகன் கோவிலுக்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். குறிப்பாக எடப்பாடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பழனிக்கு வர உள்ளனர். பின்னர் அவர்கள் மலைக்கோவிலில் பஞ்சாமிர்தம் படைத்து, சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர். அன்றைய தினம் இரவு மலைக்கோவிலில் தங்கும் அவர்கள் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

இதற்கிடையே எடப்பாடி பக்தர்களில், பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் நேற்று பழனிக்கு வந்தனர். அவர்கள் அடிவாரத்தில் கூடாரம் அமைத்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். தாங்கள் கொண்டு வந்திருந்த 9 டன் சர்க்கரை, 3 டன் பேரீச்சை பழம், 1 டன் கற்கண்டு, 200 லிட்டர் தேன், 200 லிட்டர் நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றுடன் தேவையான வாழைப்பழங்களை பெரிய அண்டாக்களில் கலந்து போட்டு, சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாமிர்தம் தயாரித்த பின்பு அவற்றை இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் அவற்றை முருகப்பெருமானுக்கு படைத்து பக்தர்கள் வழிபாடு செய்ய உள்ளனர். இதையடுத்து அவற்றை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்