அமைச்சர் பொன்முடியின் ரூ. 14 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

அமைச்சர் பொன்முடியின் ரூ. 14 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Update: 2024-07-26 14:41 GMT

சென்னை,

2007 முதல் 2010ம் ஆண்டு வரை விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறி சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அப்போது சுரங்கத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய கல்வித்துறை மந்திரி பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தனியே விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மகன் வீடுகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்நிலையில், செம்மண் குவாரி தொடர்பான பணமோசடி வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணிக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்