ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெறலாம்- கலெக்டர் அருண் தம்புராஜ்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெறலாம் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கூறி உள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெறலாம் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும், வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டம், மருந்தகம், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு 30 சதவீதம் அல்லது திட்டமதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு 50 சதவீதம் அல்லது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.
தொழில்முனைவோர்
பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களான தொழில் முனைவோர் திட்டம், நில மேம்பாட்டு திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 50 சதவீதம் அல்லது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
மற்ற திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வரை இருக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இணையதளங்கள்
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் ஆதிதிராவிட இனத்தவராக இருந்தால் www.application.tahdco.com, பழங்குடியினராக இருந்தால் www.fast.tahdco.com ஆகிய இணையதளங்களில் ரேஷன் அட்டை அல்லது இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வாகன கடன் பெறுவதற்கான ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித்தகுதி சான்றிதழ், நிலம் சார்ந்த திட்டங்களுக்கு நிலம் தொடர்பான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.