தனியார் நிதி நிறுவன குடோனில் பொருளாதார குற்ற பிரிவினர் சோதனை

செய்யாறில் உள்ள தனியார் நிதி நிறுவன குடோனில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

Update: 2023-05-11 11:43 GMT

செய்யாறு

செய்யாறில் உள்ள தனியார் நிதி நிறுவன குடோனில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

நிதி நிறுவனம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு வி.ஆர்.எஸ். என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனத்தில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி மற்றும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பண்டு சீட்டு கட்டி வந்தனர்.

2 ஆண்டுகளுக்கு மேல் முறையாக பரிசுப் பொருட்கள் வழங்கி வந்த நிலையில் கடந்த ஆண்டு நிர்வாக சிக்கல் காரணமாக சீட்டு கட்டியவர்களுக்கு முறையான பொருட்கள் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

மேலும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு 350-க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்துள்ளனர். அதில் சுமார் ரூ.45 கோடி வரை மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடோனில் சோதனை

இந்த நிலையில் செய்யாறு மண்டி தெருவில் உள்ள நெல்மண்டி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தினை வி.ஆர்.எஸ். நிதிநிறுவனத்தினர் குடோனாக பயன்படுத்தி பொருட்களை சேமித்து வைத்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கணகேசன் தலைமையில் போலீசார் குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனர்.

அங்கு 600 மூட்டைகளில் பரிசு பொருட்களாக பித்தளை மற்றும் அலுமினிய சாமான்கள் இருந்தன. பின்னர் குடோனாக பயன்படுத்திய திருமண மண்டபத்துக்கு சீல் வைத்தனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கணகேசன் கூறியதாவது:-

விரைவில் கோர்ட்டில் உத்தரவு பெற்று திருமண மண்டபத்தில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.30 ேகாடி சொத்துகள் பறிமுதல்

கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வி.ஆர்.எஸ் நிறுவனம் தொடர்பாக சம்சு மொகைதீன், சம்சுதீன், வீரமணி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகப்படும் 3 நபர்களை தேடி வருகிறோம்.

வி.ஆர்.எஸ் நிறுவனத்தின் சார்பாக குடோன்கள், சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை செய்து இதுவரை ரூ.30 கோடி வரை சொத்து மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ெசாத்துகள் மற்றும் குடோன் மூலம் பதுக்கி வைத்த பொருட்கள் ஏலம் விட்டு அதன் மூலம் வரும் நிதியை வங்கி வரைவோலையாக எடுத்து கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்