பொதுத்தேர்வு முடிவு எதிரொலி: 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 11 பேர் தற்கொலை

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 11 பேர் ஒரேநாளில் தற்கொலை செய்துகொண்டதும், 28 பேர் தற்கொலைக்கு முயற்சித்ததும் கல்வித்துறையை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.

Update: 2022-06-21 18:50 GMT

சென்னை,

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அதில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டுகளைவிட சரிந்து இருந்தது. அதிகமான மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற தவறியிருந்தனர்.

இந்த தோல்வியை சகிக்கமுடியாத நிலையிலும், தேர்வு தோல்வி பயத்தாலும் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் 11 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்வித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்கொலை செய்த 11 மாணவ-மாணவிகளில் 10 பேர் அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொரு மாணவர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்தவர் என்பதும் கூடுதல் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளன.

14 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்...

இதுதவிர 28 மாணவ-மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 16 பேர் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்தவர்கள் என்றும், 12 பேர் தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி, அரியலூர், கரூர், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் தற்கொலை செய்திருப்பதும், தற்கொலைக்கு முயற்சித்ததும் கல்வித்துறை எடுத்த புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளன.

தற்கொலை செய்துகொண்ட 11 பேரில் 4 பேர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

கோரிக்கை

பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவ-மாணவிகள் இதுபோன்ற முடிவெடுப்பதை தவிர்க்க கல்வித்துறையால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை சம்பவங்கள் சோகமான தொடர்கதையாகவே நீடிக்கின்றன.

இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி, தற்கொலை என்ற உணர்வே ஏற்படாமல், வாழ்வை துணிவோடு எதிர்கொள்ளும் மனோபாவத்தை மாணவ, மாணவிகளிடம் வளர்க்க வேண்டும். உடனடியாக இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகளை கல்வித்துறை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்கள், பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்