மருதங்குடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்

மருதங்குடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-06-01 16:24 GMT

சீர்காழி:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் இருந்து மருதங்குடி ஊராட்சி செல்லும் பிரதான சாலை உள்ளது. மருதங்குடி, ஆலஞ்சேரி, மேலவரவுகுடி, புங்கனூர், ஆதமங்கலம், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த சாலையில் மருதங்குடி ஊராட்சி பகுதியில் ஆபத்தான நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. சாய்ந்தவாறு உள்ள இந்த மின்கம்பம் எந்த நேரம் வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்து உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதேபோல இந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் பல மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்கவும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்