இடி-மின்னலின்போது மின்சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது; மின்வாரிய அதிகாரிகள் வேண்டுகோள்

இடி-மின்னலின்போது மின்சாதன பொருட்களை உபயோகிக்க வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-05-07 21:19 GMT

இடி-மின்னலின்போது மின்சாதன பொருட்களை உபயோகிக்க வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ. முத்திரை

மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்யவேண்டும். மின் கசிவு தடுப்பானை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.

உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும். பழுதுபட்ட மின் சாதனங்களை உபயோகிக்கக்கூடாது. கேபிள் டி.வி. ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதனை குழந்தைகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

விளம்பர பலகை

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம். குளியல் அறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. சுவற்றின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி.பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. மேலும் அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழை காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது.

இடி-மின்னல்

மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின் கம்பி அருகே செல்ல வேண்டாம். இதுகுறித்து உடனடியாக மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி-மின்னலின்போது தஞ்சம் அடைய எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான இடத்துக்கு செல்ல வேண்டும்.

மேலும் இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மழை காலங்களில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்தாலோ மற்றும் மின் வாரிய தொடர்பான தகவலுக்கு 94987 94987, 94458 51912 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்ற மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்