ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர்.

Update: 2023-04-09 18:45 GMT

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த விழாவை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்கு சென்று நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயம், ஆண்டிச்சியூரணி புனித அடைக்கலமாதா ஆலயம், சகாய நகர் பங்கு புனித சகாய மாதா ஆலயம், சூசையப்பர்பட்டினம் பங்கு புனித சூசையப்பர் ஆலயம் ஆகியவற்றில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

மானாமதுரை

மானாமதுரை அடுத்த இடைக்காட்டூரில் உள்ள இடைக்காட்டூர் திருத்தல ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். சிலுவையோடு கொடியை கையில் தாங்கியபடி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. திருத்தல ஆயர் இம்மானுவேல் தாசன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதே போல் மானாமதுரை குழந்தை தெரசா ஆலயத்தின் வளாகத்தில் பங்கு தந்தை பாஸ்டின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்