கிழக்கு தொகுதி, திருப்பரங்குன்றத்தில் ரூ.420 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்- அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரை கிழக்கு தொகுதி, திருப்பரங்குன்றத்தில் ரூ.420 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.;

Update: 2023-09-10 20:54 GMT


மதுரை கிழக்கு தொகுதி, திருப்பரங்குன்றத்தில் ரூ.420 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

திறப்பு விழா

மதுரை திருப்பாலையில் கால்நடை பராமரிப்பு துறையின் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் ரூ.1 கோடியே 57 லட்சம் செலவில் திருமங்கலம், மேலஉரப்பனூர், கூத்தியார்குண்டு ஆகிய இடங்களில் 3 புதிய மருந்தக கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் மூலமாக மக்களுக்கு செய்யவேண்டிய அடிப்படை தேவை பணிகளை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்கள். இன்றைக்கு கால்நடை துறையின் மூலமாக ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருந்தகங்களை கட்டி திறந்து வைத்திருக்கிறோம்.

ரூ.420 கோடி ஒதுக்கீடு

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள கிழக்கு தொகுதியின் 14 வார்டுகளுக்கும், அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் 15 வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கிழக்கு தொகுதி,திருப்பரங்குன்றம் 15 வார்டுகளுக்கு என மொத்தம் ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கூடுதல் கட்டிடங்கள்

அமைச்சர் மூர்த்தி, தனது தொகுதியான மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறை கூறுகிறார். ஆனால் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டுவதற்கு என்னுடைய தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கு அனுமதி வந்துள்ளது. ஆர்.பி.உதயகுமார், அமைச்சராக இருந்த போது கடைசி காலகட்டத்தில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டார். இன்றைக்கு வரை அந்த பணிகள் நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பாகுபாடின்றி மதுரை மாவட்டத்தின் அனைத்து தொகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உசிலம்பட்டி தொகுதியில் கூட ரூ.75 கோடி மதிப்பில் தார்சாலை பணிகள் தொடங்க உள்ளது. திருப்பரங்குன்றத்தில் ரூ.35 கோடி செலவில் சாலை உள்பட இதர பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை தெற்கு தொகுதியில் மருத்துவமனை மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இப்போது கூட எனது தொகுதியை விட, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தான் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.283 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளுக்கு சமமான திட்டங்களை வழங்கி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்