நிலநடுக்கத்தால் பாதித்த சிரியா, துருக்கிக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் - ஜாமீன் கோரியவருக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை

மதுபாட்டில் பதுக்கிய வழக்கில் கைதானவர், நிலநடுக்கத்தால் பாதித்த சிரியா, துருக்கிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கும்படி நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-02-08 21:17 GMT


மதுபாட்டில் பதுக்கிய வழக்கில் கைதானவர், நிலநடுக்கத்தால் பாதித்த சிரியா, துருக்கிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கும்படி நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுபாட்டில்கள் கடத்தல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் சமீபத்தில் 23 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக பட்டுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு செல்வம் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் சார்பில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு நிவாரணம் வழங்க தயாராக உள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என வாதாடினார்.

நிபந்தனை ஜாமீன்

விசாரணை முடிவில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள சிரியா, துருக்கி நாடுகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பிரதமர் நிவாரண நிதி கணக்கிற்கு ரூ.25 ஆயிரத்தை மனுதாரர் செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் நாள்தோறும் காலையில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும், தலைமறைவாகக்கூடாது, சாட்சியங்களை கலைக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளையும் நீதிபதி விதித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்