சென்னை விமான நிலையத்தில் அதிகாலையில் இணையதள சேவை பாதிப்பு - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்..

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Update: 2023-10-04 04:06 GMT

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் விமான நிலையத்தில் திடீரென இணையதள சேவை பாதிக்கப்பட்டது. அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை இந்த பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமானநிலைய ஊழியர்கள் போர்டிங் பாஸ்களை கையால் எழுதி கொடுத்தனர். இதனை பயணிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர். இதனால் விமானங்கள் சுமார் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதில் துபாய், சார்ஜா, லண்டன், அபுதாபி உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக சென்றன. மேலும் அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி போன்ற 12 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது , இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் போர்டிங் பாஸ்கள் வழங்க முடியவில்லை. எனினும் கூடுதலான அலுவலர்களை வைத்து முடிந்த அளவு வேகமாக கைகளால் எழுதி பாஸ்கள் வழங்கப்பட்டன. எனினும் தாமதம் ஏற்பட்டது. தற்போது பிரச்சினை சரிசெய்யப்பட்டு நிலைமை சீரானது , என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்