மேலசெக்காரக்குடியில்பழங்கால நடுகல், சதிகல் கண்டுபிடிப்பு

மேலசெக்காரக்குடியில்பழங்கால நடுகல், சதிகல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-01-06 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மேல செக்காரக்குடி உலகம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் பழங்கால நடுகல் உள்ளது. இதனை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரலாற்று ஆய்வுத்துறை பேராசிரியைகள் ஆஷா, சம்லி மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவரும், தொல்லியல் ஆராய்ச்சியாளருமான சிவகளை மாணிக்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், பழங்காலத்தில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்தனர். சற்று சாய்ந்த நிலையில் உள்ள சுமார் 2 மீட்டர் நீளமுள்ள நடுகல்லில் 1½ மீட்டர் உயரத்தில் 2 பெண் சிற்பங்களும், 2 ஆண் சிற்பங்களும் போருக்கு ஆயுதங்களுடன் செல்லும் வகையில் செதுக்கப்பட்டு இருந்தன.

மேலும் அங்குள்ள குளத்தில் பழங்கால சதிகல் இருப்பதையும் ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர். 1¼ மீட்டர் உயரமும், 38 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட சதி கல்லில் பெண் சிற்பமும், சிதைந்த நிலையில் தமிழ் எழுத்துகளும் காணப்பட்டது. பழங்காலத்தில் கணவர் இறந்தவுடன் அவரது உடலை எரிக்கும்போது, துயரம் தாங்காமல் கணவரின் சிதையில் மனைவியும் பாய்ந்து உயிரை மாய்ப்பர். அவர்களது நினைவை போற்றும் வகையில் சதிகல் அமைக்கப்பட்டதாக ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்