ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடிஅமாவாசை திருவிழா

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடிஅமாவாசை திருவிழா விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-07-28 10:03 GMT

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் நேற்று ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் ெசய்தனர்.

கொடியேற்றம்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. அன்று முதல் இரவு சப்பரத்தில் சாமி வெவ்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று நடைபெற்ற முக்கிய திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேன், பஸ், கார் போன்ற வாகனங்களில் வந்து கோவில் வளாகத்தில் குவிந்தனர். நேற்று பகல் 1 மணிக்கு சாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் ஆனந்த காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமிக்கு பால், மஞ்சள், தயிர், தேன், சீவக்காய், இளநீர் போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது.

கற்பகப்பொன் சப்பரத்தில் எழுந்தருளல்

மாலையில் இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 11 மணிக்கு வான வேடிக்கையுடன் கற்பகப்பொன் சப்பரத்தில் சாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி ஆற்றில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

இத்திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்செந்தூர், சாத்தான்குளம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில், ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

பச்சை சாத்தி அபிஷேகம்

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 4 மணிக்கு வெள்ளை சாதி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி, கற்பூர தீப தரிசனம் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தீர்த்த வாரி பொருளை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், 12.30 மணிக்கு அன்னதானம், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்