3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Update: 2022-06-23 15:48 GMT

திருப்பூர்

திருப்பூரில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செல்போன் பறிக்க முயற்சி

திருப்பூர் குப்பாண்டம்பாளையம் அருகில் வெற்றிவேல் என்பவர் கடந்த மே மாதம் 1-ந் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது 2 பேர் கத்தியை காட்டி வழிமறித்து கொலைமிரட்டல் விடுத்து, பணம், செல்போனை பறிக்க முயன்றனர். சத்தம் போட பொதுமக்கள் அங்கு வந்து 2 பேரையும் பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் மங்கலம் இந்தியன் நகரை சேர்ந்த முகமது ஆசிப் (வயது 23), சாமுண்டிபுரத்தை சேர்ந்த மதன்தாஸ் (24) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களில் முகமது ஆசிப் மீது வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கொலைமுயற்சி வழக்கும், வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலைமுயற்சி வழக்கும் என 2 வழக்குகள் உள்ளன. மதன்தாஸ் மீது வேலம்பாளையம், வீரபாண்டி போலீஸ் நிலையங்களில் தலா ஒரு கொலைமுயற்சி வழக்கும், வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு காய வழக்கு என 3 வழக்குகள் உள்ளன.

3 பேர் சிறையில் அடைப்பு

திருப்பூர் அங்கேரிப்பாளையம் ரோட்டில் டாஸ்மாக் குடோன் அருகே பாலு (50) என்பவர் அதிகாலை நேரத்தில் லாரியில் தூங்கிக்கொண்டு இருந்தார். சத்தம் கேட்டு எழுந்து வந்தபோது 4 பேர் அவரை கத்தியை காட்டி மிரட்டி, பணம், செல்போனை பறித்து தப்பினார்கள். அனுப்பர்பாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் (22) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜய் மீது அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய வழக்கும், வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு செல்போன் பறித்த வழக்கும் உள்ளன.

முகமது ஆசிப், மதன்தாஸ், விஜய் ஆகியோர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார். அதன்படி மத்திய சிறையில் உள்ள முகமது ஆசிப், மதன்தாஸ், விஜய் ஆகியோரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மாநகரில் 48 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்