குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ேகாவில் தசரா திருவிழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
தசரா திருவிழா
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 8-ம் நாளான நேற்று இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தசரா திருவிழாவையொட்டி, விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து, அதில் பக்தர்கள் தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர்.
வேடமணிந்த பக்தர்கள்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களிலும் வேடமணிந்த தசரா பக்தர்கள் குழுக்களாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபட்டும், வீதி வீதியாக சென்றும் காணிக்கை சேகரிக்கின்றனர்.
ஒவ்வொரு தசரா குழுவிலும் காளி, சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், கிருஷ்ணர், நாராயணர், அனுமா் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அரசன், குறவன், கரடி, கிளி, புலி போன்ற வேடங்களையும் சில பக்தர்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பக்தி கோஷங்கள் முழங்க...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர். கோவில்களில் தசரா பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' போன்ற பக்தி கோஷங்களை முழங்கியவாறு வழிபடுகின்றனர். காளி வேடம் அணிந்த பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி செல்கின்றனர். சில பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தசரா குழுவினருடன் நாட்டுப்புற கலைஞர்களும் சென்று கரகாட்டம், சிலம்பாட்டம், மேற்கத்திய நடனம் போன்றவற்றை நடத்துகின்றனர். உடன்குடி அருகே தாண்டவன்காட்டில் பிரமாண்ட அம்மன் சிலைகள் கண்களை திறந்து மூடுவது போன்றும், மூச்சு விடுவது போன்றும், கையசைப்பது போன்றும் தத்ரூபமாக அமைத்துள்ளனர். தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.
நாளை, சூரசம்ஹாரம்
குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவின் 9-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு அன்னவாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிகின்றனர்.
விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் புறநகரில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
------------