கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு கடந்த மாதம் 27-ந் தேதி மகாபாரத சொற்பொழிவு தொடங்கியது.
அன்று முதல் தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்து வருகிறது.
கோவில் வளாகத்தில் உள்ள திடலில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சோழந்தாங்கல் ஜெயகாந்தி குழுவினரால் பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. இரவில் தெருக்கூத்து நாடகம் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து இன்று காலை ஏரிக்கரை பகுதியில் துரியோதனன் முழு உருவம் களிமண்ணால் பிரமாண்டமான அளவில் வடிவமைக்கப்பட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் கோவில் முன்பு தீமிதி விழாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். இரவு அம்மன் வீதி உலா நடந்தது.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் எதிரில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் சரவணன், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில் அன்னதானம் வழங்கினார்.