மேலூரில் பந்தயத்தின்போது 3 மாட்டு வண்டிகள் அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு- பசுமாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்

பந்தயத்தின்போது 3 மாட்டு வண்டிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. பசுமாடு குறுக்கே பாய்ந்ததால் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

Update: 2023-05-29 21:06 GMT

மேலூர்

பந்தயத்தின்போது 3 மாட்டு வண்டிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. பசுமாடு குறுக்கே பாய்ந்ததால் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

மாட்டு வண்டி பந்தயம்

மதுரை மாவட்டம் மேலூரில் தனியார் அமைப்பு ஒன்று மாட்டு வண்டி பந்தயத்தை நேற்று நடத்தியது.

மேலூர்-சிவகங்கை ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சிறிய மாட்டு வண்டி மற்றும் பெரிய மாட்டு வண்டி என்று 2 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.

பெரிய வண்டிகளுக்கான போட்டியில் 9 வண்டிகளும், சிறிய வண்டிகளுக்கான போட்டியில் 14 வண்டிகளும் கலந்துகொண்டன. சிறிய வண்டி போட்டி தொடங்கிய இடத்தில் இருந்து, வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன.

3 மாட்டு வண்டிகள் மோதல்

அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் பக்கவாட்டில் இருந்து பசு மாடு ஒன்று ரோட்டை கடக்க பாய்ந்தது. உடனே பந்தய மாட்டு வண்டியில் பூட்டி வந்த மாடு நிலை தடுமாறி, கீழே விழுந்து இழுத்து செல்லப்பட்டது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த 2 வண்டிகள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதில் 3 வண்டிகள் சேதம் அடைந்தன. மாடுகளும் காயம் அடைந்தன.

இந்த காட்சியை வேடிக்கை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஓடிவந்து 3 வண்டிகளையும், அவற்றில் பூட்டப்பட்டிருந்த மாடுகளையும் அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போட்டி தொடர்ந்து நடந்தது.

மாட்டு வண்டி போட்டியில் 3 வண்டிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்