தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பேன்
ம.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலமே இல்லை என்றும், தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கூறினார்.
ம.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலமே இல்லை என்றும், தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கூறினார்.
வைகோவுக்கு கடிதம்
ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் வாரிசு அரசியலை கண்டித்தும், ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த துரைசாமி முயற்சிக்கிறார் என்று பதிலடி கொடுத்தார்.
இது ம.தி.மு.க. மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ம.தி.மு.க. தொழிற்சங்க அலுவலகமான எம்.எல்.எப். அலுவலகத்தில் மே தினவிழாவையொட்டி அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.
பின்னர் துரைசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தொழிற்சங்க ெசாத்து
எனக்கு பின்னால் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை என்று சொல்கிறார்கள். இன்று (நேற்று) நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் தொழிலாளர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்பதை பார்த்தாலே தெரியும். தொழிற்சங்க சொத்து தொடர்பாகவே பிரச்சினை நடைபெறுவதாக பேசப்படுகிறது. அதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தொழிற்சங்க சொத்துக்களை துரைசாமி தூக்கிக்கொண்டு சென்று விட்டதாக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டி உள்ளார்.
சங்கத்தை பொறுத்தவரை பொதுச்செயலாளர், பொருளாளர் என இணைந்துதான் பொருளாதாரத்தை கையாள முடியுமே தவிர, தனிப்பட்ட நபர் யாரும் சொத்தை எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு தொழிற்சங்கத்தையும் அமைப்பு சட்டம் மட்டுமே கட்டுப்படுத்த முடியுமே தவிர அரசியல் கட்சிகள் கட்டுப்படுத்த முடியாது.
கட்சியில் பொருளாளர் என்ற பதவி உள்ளது. ஆனால் மு.கண்ணப்பனுக்கு பிறகு, மாசிலாமணி, கணேசமூர்த்தி ஆகியோர் பொருளாளராக இருந்த நிலையில் அவர்களுக்கு கட்சியின் வரவு, செலவு என்னவென்று தெரியாது. காசோலையில் அவர்கள் கையெழுத்து போட்டதும் இல்லை.
எதிர்காலமே இல்லை
பொதுச்செயலாளர் வைகோவுக்கு இதுவரை 6 கடிதங்கள் எழுதி உள்ளேன். ஆனால் இதுவரை எந்த கடிதங்களுக்கும் பதில் வரவில்லை. வைகோவுக்கு மட்டுமே நான் பதில் சொல்லுவேனே தவிர வேறு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. கட்சியில் நடந்த தேர்தல் அனைத்தும் பினாமி தேர்தலாகவே நடந்துள்ளது. சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவில்லை.
ம.தி.மு.க. கட்சி தற்போது பலவீனப்பட்டுள்ளது. ம.தி.மு.க. என்ற கட்சிக்கு எதிர்காலமே இல்லை. எனவே இப்போதே தி.மு.க.வுடன் இணைத்து விட்டால் கட்சியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். பெரியார், அண்ணா கொள்கைளை வலியுறுத்த பாடுபடுவேன். தற்போது வரை ம.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளேன். புதிய கட்சி தொடங்கவோ, வேறு எந்த கட்சியில் சேரும் எண்ணமோ எனக்கு இல்லை. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பேன். தற்போது எந்த அரசியல் கட்சியிலும் நியாயத்தை பேச முடியவில்லை. பேசினால் எதிர்ப்பு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.