தென்காசி கலெக்டரிடம், துரை வைகோ மனு

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகை உடனே வழங்க வேண்டும் என தென்காசி கலெக்டரிடம், துரை வைகோ மனு அளித்தார்

Update: 2022-11-04 18:45 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய தாலுகாக்களில் விவசாயிகள் உளுந்து, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட மாட்டாது என தவறுதலாக அறிவிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இழப்பீடு வழங்கலாம் என மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இதுவரை அந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த கோரிக்கை குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நேற்று கோரிக்கை மனு கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கக்கோரி மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்தேன். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

பால் விலை குறைக்க பொதுமக்கள் கூறுகிறார்கள். மாட்டு தீவனங்களின் விலை கூடுதலாக இருப்பதால் பால் விலை உயர்த்த வேண்டிய சூழ்நிலை இருப்பதாக பால் வியாபாரிகள் கூறுகிறார்கள். இருப்பினும் அரசு இதுகுறித்து பரிசீலித்து வருகிறது.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் போல, பேச்சாளர் போல செயல்பட்டு வருகிறார். ஜனநாயகத்திற்கு புறம்பாக 20 தீர்மானங்களை கிடப்பில் போட்டுள்ளார்.

ராகுல் காந்தி நடைபயணத்தின்போது அவரை சந்தித்தேன். மதத்தின் பெயரால் பிரித்தாளும் கூட்டம் நீடிக்காது என்றும், இந்திய நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

இவ்வாறு துரை வைகோ கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்