நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ போட்டியா? வைகோ பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவாரா? என்பது குறித்து வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-10 18:36 GMT

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டம் கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிதியாக ரூ.5 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண அவர்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்.

* இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை மத்திய அரசு விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன் இதுவரை இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ள 133 படகுகளையும் மீட்க வேண்டும்.

மேற்கண்டதீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொருளாளர் செந்திலதிபன், முதன்மை செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வைகோ பேட்டி

பின்னர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.தி.மு.க. நிர்வாகக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்றது. கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து சொன்னார்கள். அதற்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை. துரை வைகோவும், அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிரச்சினைகளை கையில் எடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிற இந்த நேரத்தில் கூட தமிழக அரசு கேட்ட தொகையில் 15 சதவீதத்தைதான் மத்திய அரசு தந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் `இந்தியா' கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணியில்எத்தனை இடங்கள்?

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. எத்தனை இடங்களை கேட்கும்?

பதில்:- கூட்டத்தில் எத்தனை இடங்கள் கேட்பது என்பது பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. எனவே அதுபற்றி தற்போது எவுதும் சொல்ல மாட்டேன்.

கேள்வி:- துரை வைகோ போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா?

பதில்:- தி.மு.க. கூட்டணியில் எந்த இடங்கள் தருகிறார்கள் என்பதை பொறுத்து கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

கேள்வி:- மழைவெள்ள பாதிப்பால் தமிழ்நாடு அரசு மீது மக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ளதே...

பதில்:- மழைவெள்ள மீட்பு பணியில் தி.மு.க. அரசின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. எதிர்ப்பு சிறிய அளவில்தான் இருக்கிறது.

'இந்தியா' கூட்டணியில்...

கேள்வி:- மழைவெள்ள நிவாரணமாக அரசு அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் போதுமா?

பதில்:- மாநில அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டுதான் நிவாரணம் கொடுக்க முடியும்.

கேள்வி:- 'இந்தியா' கூட்டணி தலைவர்களிடையே மனக்கஷ்டங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

பதில்:- அப்படி ஒன்றும் இல்லை. எல்லா தலைவர்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்