பைபாஸ் சாலையில் மீன் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் மீன் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் மீன் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
நகரமன்ற கூட்டம்
ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரமேஷ் கருணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை எம்.பி.டி. சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி, சங்கர் நகர் பகுதியில் பூங்கா அமைக்கும் பணி, பிஞ்சி சுடுகாட்டு பகுதியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை புனரமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அனுமதி அளித்தல், ராணிப்பேட்டையில் உள்ள எம்.எப்.சாலைக்கு சுதந்திரப் போராட்ட தியாகி கல்யாணராமன் பெயர் சூட்டுவதற்கு அரசின் அனுமதி பெறுவதுற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தடுக்க வேண்டும்
தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசினர். அப்போது ராணிப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது, உடனடியாக கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து டெங்கு பரவாமல் தடுக்க வேண்டும். ராணிப்பேட்டை சுடுகாட்டில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைத்து தர வேண்டும், ராணிப்பேட்டையில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும்.
ராணிப்பேட்டை பாலாறு அருகே உள்ள அரசு மதுக்கடை, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்ற வேண்டும், ராணிப்பேட்டையில் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். பைபாஸ் சாலையில் மீன் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. பன்றிகள் தொல்லை, நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைச்சர் வார்டில் உள்ள அங்கன்வாடி மோசமாக உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கைகள் எடுப்பதாக நகர மன்ற தலைவர் பதில் அளித்தார்.
அரசின் உத்தரவை ஏற்று, ராணிப்பேட்டையில் ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.