நெல் அறுவடை செய்த நிலங்களை வளமாக்கும் வாத்துகள்

Update: 2023-06-09 16:17 GMT


மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடை முடிந்து காலியாக உள்ள நிலங்களில் வாத்துகள் மேய்ச்சலுக்கு விடப்படுவதால் வளமாகி வருகிறது.

பருவமழை

மடத்துக்குளம், கணியூர், கடத்தூர், சோழமாதேவி, கண்ணாடிப்புதூர், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில் அமராவதி ஆற்றை அடிப்படையாகக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களில் தற்போது அறுவடை முடிந்துள்ளது.

விரைவில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அடுத்த போக சாகுபடிக்கு நெல் வயல்களை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் காலியாக உள்ள நிலங்களில் வாத்துக் கூட்டத்தை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

கூட்டுப்புழுக்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

'ஒவ்வொரு அறுவடையின் போதும் விளைநிலங்களில் நெல் மணிகள் சிதறியிருக்கும். அடுத்த போகத்தில் வேறு ரக நெல் சாகுபடி செய்தால் இந்த நெல்மணிகளிலிருந்து முளைக்கும் பயிர் கலப்பை ஏற்படுத்தும். அதனைத் தவிர்க்க சிதறிய நெல்மணிகளை உணவாக்கிக் கொள்வதன் மூலம் வாத்துக்கூட்டம் உதவுகிறது. மேலும் மண்ணில் இருக்கும் புழு, பூச்சிகள் மற்றும் கூட்டுப் புழுக்கள் அடுத்த சாகுபடியின் போது பயிர் சேதத்தை ஏற்படுத்தும்.

அவற்றை வாத்துக் கூட்டம் அழித்து விடுகிறது. மேலும் வாத்துகளின் கழிவுகள் சிறந்த உரமாக மாறி விளைநிலங்களை வளமாக்குகிறது. இதனைக் கருத்தில் கொண்டு குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாத்து வளர்ப்போரை அழைத்து வந்து வயல்களில் பட்டி அமைத்துள்ளோம். அவர்களுக்கு வாத்துகள் எண்ணிக்கை அடிப்படையில் சிறிய தொகை வழங்கினால் போதும்.

மண்வளம்

விளைநிலங்களில் மேய்ச்சலுக்கு விடுவதால் வாத்துகளின் தீவனத் தேவை பூர்த்தியாகிறது. அதேநேரத்தில் வருவாயும் கிடைக்கிறது. தற்போது விவசாயத்தில் பெருமளவு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் மண் வளம் பாழாகி வருகிறது. இந்தநிலையில் விளைநிலங்களை வளமாக்க நமது பாரம்பரிய முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இழந்த மண்வளத்தை மீட்க முடிகிறது'என்று விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்