இடுகாட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலை ஓரத்தில் உடலை தகனம் செய்யும் அவலம்

குன்னம் அருகே இடுகாட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலை ஓரத்தில் உடலை தகனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.;

Update:2022-12-27 00:30 IST

இடுகாட்டில் தேங்கி நிற்கும் தண்ணீர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆய்க்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆய்க்குடி- அசூர் செல்லும் சாலையின் மேற்கு பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் சாலையின் மறுபுறமான கிழக்குப் பகுதியின் சில இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதே பகுதியில் ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தும் இடுகாடும் உள்ளது. அங்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் சமீபத்தில் இறந்த ஒருவரது உடலை சாலை ஓரத்திலேயே தகனம் செய்தனர். மழைக்காலங்களிலும் இந்த இடுகாட்டைப் பயன்படுத்தும் வகையில் உயரத்தை அதிகப்படுத்தி சீரமைத்துத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:-

ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்த விமலாதித்தன்:- ஆய்க்குடி-அசூர் செல்லும் சாலையின் மேற்கு பகுதியில் பெரிய ஏரி அமைந்துள்ளது. அதே சாலையின் கிழக்குப் பகுதியில் இடுகாடு அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததோடு சாலையின் மறுபகுதியில் அமைந்துள்ள இடுகாட்டுப் பகுதியும் மழை நீரால் சூழப்பட்டது. இதனால் அந்த இடுகாட்டை பயன்படுத்த முடியாத காரணத்தினால் சமீபத்தில் இறந்தவரின் உடலை சாலைக்கு அருகிலேயே தகனம் செய்தோம். மழைக்காலத்திலும் இந்த இடுகாட்டை மக்கள் பயன்படுத்த ஏதுவாக விரைந்து சீரமைத்துத் தர வேண்டும்

நீர்மட்டம் உயரும்போது...

இளையராஜா:- ஆய்க்குடி- அசூர் சாலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பெரிய ஏரி. இந்த ஏரியானது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரியாகும். இந்த ஏரிக்கு அசூர் மற்றும் ஆய்க்குடி பகுதிகளில் உள்ள காடுகளில் பெய்யும் மழை நீரானது வாய்க்கால்கள் மற்றும் ஓடைகள் மூலம் வந்து இந்த பெரிய ஏரியில் சேர்கிறது. சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள காடுகளில் இருந்தும் இந்த ஏரிக்கு தண்ணீர் வருகிறது. ஏரியின் நீர்மட்டம் உயரும்போது சாலையின் கிழக்குப் பகுதிகளில் இருந்து நீரைக் கொண்டு வரும் வாய்க்காலுக்கு வழிவிடும் வகையில் அமைக்கப்பட்ட பாலம் வழியே அதே வாய்க்காலில் தண்ணீர் எதிர்த்து நிற்பதோடு அருகாமை பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும் ஏரிக்குள் செல்ல முடியாமல் அங்கேயே தேங்கி உள்ளது.

சாலை ஓரத்தில் தகனம்

விமலாதித்தன்:- இந்த பகுதியில் இடுகாடு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெரிய ஏரியானது வேளாண்மை, நிலத்தடி நீர்மட்டம் உள்ளிட்ட பல்வேறு பலன்களை வழங்கி வருகிறது. ஏரி போதிய அளவு ஆழம் இல்லாமல் இருப்பதால் கூடுதலாக தண்ணீரை தேக்க முடியாமலும், கிழக்குப் பகுதியில் எதிர்த்து நிற்கும் சூழலும் உள்ளது. ஆகையினால் ஆழப்படுத்தப்படாத பகுதிகளை உரிய நிதி ஒதுக்கி முறையாக ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவேக் ஹரிநாத் சிங்:- இந்த இடுகாட்டை நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். மழைக்காலங்களில் சுற்றிலும் தண்ணீர் நிற்பதால் சாலை ஓரத்தில் தகனம் செய்யும் அவலநிலை நிலவுகிறது. ஏரியின் நீர்மட்டம் உயரும்போது இப்பகுதியையும் தண்ணீர் சூழ்கிறது. இதனால் இந்த இடுகாடு உள்ள பகுதி மற்றும் அதற்கு செல்லும் பாதையின் உயரத்தை அதிகரித்து இடுகாட்டையும் புதுப்பித்துக் கொடுத்தால் மழைக்காலங்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்