இணையதள சர்வரின் வேகக்குறைவால் பத்திரப்பதிவு பணிகள் தாமதம்
பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் இணையதள சர்வரின் வேகக்குறைவால் பத்திரப்பதிவு பணிகள் தாமதம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.
சார்பதிவாளர் அலுவலகங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, செட்டிகுளம் மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரம்பலூரில் தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து குறிப்பிட்ட நேரத்திற்கான முன்பதிவு செய்யப்பட்டு டோக்கன் பெற்று தினந்தோறும் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக 45 முதல் 60 வரையிலான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசின் விடுமுறை தினங்கள், பண்டிகை காலங்கள் தவிர அரசின் உத்தரவுப்படி சனிக்கிழமையும் பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் வாராந்திர நாட்களைவிட குறைந்த எண்ணிக்கையில் பத்திரப்பதிவு இருக்கும்.
சர்வரின் வேகம் குறைவு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறையின் இணையதள சேவை அளிக்கும் சர்வரின் வேகம் வழக்கத்தைவிடகுறைவாக இருப்பதால், பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகம், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, செட்டிகுளம் மற்றும் கொளக்காநத்தம் சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமான பத்திரப்பதிவு எண்ணிக்கையைவிட பாதியாக குறைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் வீட்டுமனை விற்பனையாளர்கள், நில உரிமையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து பத்திரப்பதிவு செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பலநேரங்களில் வெளியூரில் இருந்து வருபவர்கள் பத்திரப்பதிவு செய்வதற்காக தங்களது நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து வந்து மாலை வரை மணிக்கணக்கில் காத்திருந்தும், கடைசிநேரத்தில் பத்திரம் பதிய முடியாமல் மறுநாள் வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
பொதுமக்கள் அவதி
இணையதள சர்வரின் வேகக்குறைவால் பத்திரம் பதிவுசெய்வதற்காக வரும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஆவண எழுத்தர் ஒருவரிடம் கேட்டபோது, தமிழ்நாடு அரசுக்கு வருவாய் சேர்க்கும் பத்திரப்பதிவுத்துறை இதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அரசுக்கு வருவாய் குறைவதுடன், குறிப்பிட்ட நேரத்தில் பத்திரம் பதிவு செய்யமுடியாமல் ஆவண எழுத்தர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இந்த பிரச்சினை பெரம்பலூரில் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் உள்ளதால், தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு உரிய தீர்வுகாணவேண்டும் என்று கூறினார்.