பள்ளிக்குள் கழிவுநீர் புகுந்ததால் மாணவர்களுடன், பெற்றோர் சாலை மறியல்: வீரபாண்டி அருகே பரபரப்பு

வீரபாண்டி அருகே பள்ளிக்குள் கழிவுநீர் புகுந்ததால் மாணவர்களுடன், பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-08 18:45 GMT

பள்ளியில் தேங்கிய கழிவுநீர்

 வீரபாண்டி அருகே முத்துதேவன்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வீரபாண்டி பேரூராட்சி சார்பில் இந்த பள்ளிக்கு வெளியே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.

பணி இன்னும் முடிவடையாததால் அந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து பள்ளி வளாகத்துக்குள் புகுந்து கடந்த 15 நாட்களாக தேங்கி நிற்கிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம், பேரூராட்சி அலுவலக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர், குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்கள் பரவுவதாக கூறி நேற்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. மேலும் பெற்றோர், தங்களது குழந்தைகளுடன் தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார், பேரூராட்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளிக்குள் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தேனி-குமுளி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்