கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை-ஆனைமலை அருகே பரபரப்பு
ஆனைமலை அருகே கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
ஆனைமலை
ஆனைமலை அருகே கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பொள்ளாச்சி, சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், ஆழியாறு பீடர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது 3 சுற்றுக்கள் முடிந்து 4 சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 120 நாட்கள் தண்ணீர் வழங்க தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டு இருந்தது. வழக்கமாக பயிர் காலம் 135 நாட்கள் என்பதால் 135 நாட்கள் தண்ணீர் வழங்கப்படும்.புதிய அரசாணையில் 15 நாட்கள் குறைக்கப்பட்டு இருந்ததால் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் எடுக்க மாட்டோம் என விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை
அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்கள் தண்ணீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். பின்பு தண்ணீரும் வழங்கப்பட்டது. இதற்கிடையில் வேட்டைக்காரன்புதூர் அருகே கால்வாயில் திடீரென்று மண் அரிப்பு ஏற்பட்டு கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. மேலும் வேட்டைக்காரன் புதூர் அருகில் தரைப்பாலம் கட்டுவதற்காக 2 நாள் தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் நான்கு நாட்களுக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. நிறுத்தம் செய்யப்பட்ட 4 நாட்கள் தண்ணீரை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததோடு திடீரென பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தண்ணீர் வழங்க மறுப்பு
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- வேட்டைக்காரன்புதூர் அருகே கால்வாயில் திடீரென்று மண் அரிப்பு காரணமாக கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. மேலும் வேட்டைக்காரன் புதூர் அருகில் தரை பாலம் கட்டுவதற்காக இரண்டு நாள் தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது.மொத்தம் நான்கு நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. அதிகாரிடம் கேட்டபோது இந்த நான்கு நாட்கள் தண்ணீர் வழங்கப்படுவதாக உறுதி அளித்தனர். ஆனால் தற்போது தண்ணீர் வழங்க முடியாது என அலட்சியமாக தெரிவிக்கின்றனர். இதனால் நிறுத்தம் செய்யப்பட்ட 4 நாட்களுக்கு பாசன தண்ணீரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.