காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் கட்டளை கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் கட்டளை கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-24 22:01 GMT

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் கட்டளை கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மின் உற்பத்தி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் உற்பத்தி செய்வதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளை கதவணைகள் கட்டப்பட்டு உள்ளன. அதன்படி செக்கானூர், குதிரைகல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, பி.பி.அக்ரகாரம், வெண்டிபாளையம், பாசூர் ஆகிய 7 இடங்களில் கட்டளை கதவணைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற கட்டளை கதவணைகளில் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இந்தநிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் காவிரி ஆற்றில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. குடிநீர் பயன்பாட்டுக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் கட்டளை கதவணைகளில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

18 மதகுகள்

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் 18 மதகுகள் உள்ளன. அங்கு 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே காவிரி ஆற்றில் குறைந்தது வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே கதவணைகளில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கதவணைகளில் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் செல்லும் வகையில் மதகு திறக்கப்பட்டு உள்ளது. மற்ற மதகுகளை அடைத்து வைக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் சேகரிக்கப்படும். மின்உற்பத்திக்கு தேவையான தண்ணீர் தேங்கிய பிறகு, மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினா்.

Tags:    

மேலும் செய்திகள்