உரிய ஆவணங்கள் இல்லாததால் 3½ டன் விதைகள் விற்பனைக்கு தடை

உரிய ஆவணங்கள் இல்லாததால் தேனி மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் ரூ.18½ லட்சம் மதிப்புள்ள 3½ டன் விதைகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர்.

Update: 2022-08-25 14:18 GMT

அதிகாரிகள் ஆய்வு

தேனி, ஆண்டிப்பட்டி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம் ஆகிய பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்கள் மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் தலைமையில், தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த விதை ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். மொத்தம் 29 விதை விற்பனை நிலையங்களில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

விதைகளின் தரத்தை அறிவதற்காக பகுப்பாய்வு முடிவுகள், கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள், பதிவுச்சான்று ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பருத்தி, மக்காச்சோளம், சோளம், கம்பு மற்றும் காய்கறி விதைகளை ஆய்வு செய்தனர். அவற்றின் தரத்தை ஆய்வு செய்வதற்காக 45 விதை மாதிரிகள் சேகரித்து அதனை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

விற்பனைக்கு தடை

இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்களின்றி காய்கறி விதைகள், சோளம், மக்காச்சோளம் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததாக கண்டறியப்பட்டது. இதனால், சுமார் ரூ.18 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலான 3.7 டன் விதைகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர்.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசனிடம் கேட்டபோது, "விதைச்சட்டம் 1966-ல் குறிப்பிட்ட 14 காரணிகளும் விவர அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் விதை விற்பனை உரிமத்தை புதுப்பிக்காமல் விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை பட்டியல் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்