புழுதி பறப்பதால் கிராம மக்கள் அவதி
தஞ்சை- கும்பகோணம் நெடுஞ்சாலை பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. புழுதி பறப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மெலட்டூர்:
தஞ்சை- கும்பகோணம் நெடுஞ்சாலை பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. புழுதி பறப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நெடுஞ்சாலை பணிகள்
தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையானது பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது. சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த சாலையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின.
மெலட்டூர் அருகே உள்ள அகரமாங்குடி, வடக்குமாங்குடி, தேவராயன்பேட்டை, குழிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை, கும்பகோணம் போன்ற நகரங்களுக்கு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
புழுதி பறப்பதால்...
இந்த நிலையில் நெடுஞ்சாலை பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்கு புழுதியும் பறப்பதால் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
சாலையில் பல்வேறு இடங்களில் கற்கள் சிதறிக்கிடக்கின்றன. சாலை பணிகளையொட்டி தண்ணீர் கூட ஊற்றப்படாததால், அந்த பகுதி வழியாக வாகனங்களில் செல்லும் கிராம மக்கள் தினசரி சிரமப்படுகிறார்கள்.
கனரக வாகனங்களை பின்தொடர்ந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் தூசி விழுந்து அவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இந்த சாலை பணியை விரைந்து முடிப்பதோடு புழுதி பறக்காத வகையில் சாலையில் தண்ணீர் தெளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெலட்டூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.