பாசன குழாய்களை துண்டித்ததால் குடும்பத்துடன் நீதி கேட்டு விவசாயிகள் ஊர்வலம் செல்ல முயற்சி; போலீசாா் தடுத்ததால் தள்ளு-முள்ளு: சின்னமனூரில் பரபரப்பு
சின்னமனூரில், பாசன குழாய்களை துண்டித்ததால் குடும்பத்துடன் நீதி கேட்டு விவசாயிகள் ஊா்வலம் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
குழாய்கள் துண்டிப்பு
தேனி மாவட்டம் சின்னமனூர் முல்லைப்பெரியாறு பகுதியில் விவசாயிகள் பட்டா நிலங்களில் கிணறு அமைத்து, அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குழாய் மூலம் பூமிக்கு அடியில் பதித்து சின்னமனூரை ஒட்டியுள்ள ஓடைப்பட்டி வெள்ளையம்மாள்புரம், தென்பழனி, சீப்பாலக்கோட்டை, எரசக்கநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனத்திற்காக கொண்டு செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் மூலம் வாழை, திராட்சை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் விவசாயிகள் அனுமதி இல்லாமல் தண்ணீர் கொண்டு செல்வதாக கூறி 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் குழாய்களின் இணைப்பை துண்டித்தனர். இதனால் வாழை, திராட்சை உள்ளிட்ட விவசாய பயிர்கள் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது.
ஊர்வலம் செல்ல முயற்சி
இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர். மேலும் துண்டிக்கப்பட்ட குழாய்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டரிடம் நீதி கேட்டு விவசாயிகள் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று காலை சின்னமனூரில் காந்தி சிலை பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக செல்ல திரண்டனர். இதனால் தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். காந்தி சிலை பஸ் நிறுத்த பகுதியில் இருந்து பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
ரேஷன், ஆதார் கார்டு ஒப்படைப்பு
அப்போது போலீசார் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்று கூறினர். இதனால் விவசாயிகள், போலீசாருக்கு இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டங்களை தடுக்கும் நோக்கத்தோடு சிலர் ஈடுபடுவதாகவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, பாசன குழாய்கள் துண்டிக்கப்பட்டதால் விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகிப் போய் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துண்டிக்கப்பட்ட பாசன குழாய்களுக்கு இணைப்புகள் வழங்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 8-ந்தேதி விவசாயிகள் தங்களின் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.