மேய்ச்சலுக்கு விடப்படும் வாத்துகள்

மெலட்டூர் அருகே வயல்களில் இயற்கை உரத்துக்காக ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வாத்துகள் விடப்பட்டு உள்ளன.

Update: 2023-02-21 22:04 GMT

மெலட்டூர்;

மெலட்டூர் அருகே வயல்களில் இயற்கை உரத்துக்காக ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வாத்துகள் விடப்பட்டு உள்ளன.

மேய்ச்சலுக்கு விடப்பட்ட வாத்துகள்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் இயற்்கை உரத்துக்காக கொண்டு வரப்பட்டு மேய்ச்சலுக்காக விடப்பட்டு உள்ளன. இவை சம்பா அறுவடை செய்யப்பட்ட வயல்களிலும், நீர்நிலைகளிலும் தினசரி மேய்ச்சலுக்காக விடப்பட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்தும் திருச்சி, கடலூர் மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் மேய்ச்சலுக்காக தமிழகத்தில் தண்ணீர் வரத்து உள்ள கிராமங்களின் பல்வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு மேய்ச்சலில் ஈடுபடுத்தப்படுகின்றன.

வாத்து இறைச்சி

வாத்துக்கள் தினசரி முட்டையிடும் வழக்கத்தை கொண்டதாகும். பாபநாசம் அருகே உள்ள இரும்புதலை பகுதியில் மட்டும் 2000 வாத்துகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டு உள்ளன. இங்கிருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை வாத்துகள் இடுவதாகவும், வாத்து முட்டைகளை தொழிலாளர்கள் தினசரி சேகரித்து சென்னை உள்பட வெளி மாவட்டங்களுக்கு மொத்தமாக விற்பனைக்கு கொண்டு செல்வதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.வாத்துகள் முட்டை உற்பத்திக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வாத்துமுட்டைகளுக்கு நகர்புறங்களில் கடும் கிராக்கி உண்டு. வாத்துக்கறி கிலோ ரூ.200 வரையிலும், ஒரு முட்டை ரூ.7-க்கும் விற்கப்படுகிறது.

இது குறித்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாத்து மேய்க்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாங்கள் மழைக்காலம் மற்றும் வயல்கள் அறுவடை தொடங்கும் காலத்தில் வாத்துக்களை மேய்ச்சலுக்காக இங்கு கொண்டு வருவோம். சில மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருந்து வாய்க்கால்களில் தண்ணீர் உள்ள நீர்நிலை வயல்வெளி பகுதியில் வாத்துக்களை மேயவிடுவோம். பிறகு வயல்களில் நடவு நட தொடங்கி விட்டால் வேறு பகுதிக்கு சென்று விடுவோம் . வாத்து மேய்க்கும் பணியில் பல கூலி தொழிலாளர்கள் குடும்பங்கள் ஈடுபட்டு உள்ளன. இவ்வாறு அவா்கள் கூறினா். 

Tags:    

மேலும் செய்திகள்