கோத்தகிரியில் அறுவடையான காப்பி கொட்டைகளை உலர்த்தும் பணி

கோத்தகிரியில் அறுவடையான காப்பி கொட்டைகளை உலர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-10-27 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் அறுவடையான காப்பி கொட்டைகளை உலர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காபி சாகுபடி

கோத்தகிரி பகுதியில் ஆண்டு தோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை 6 மாதங்கள் பெய்வது வழக்கம். இதை பயன்படுத்தி குஞ்சப்பனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் பணப்பயிரான காபி, தேயிலை, குறுமிளகு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக காபி பயிரில் அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது. கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பரவலாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காபி செடிகள் பூத்து, காய்கள் கொத்துக் கொத்தாக காய்த்துக் குலுங்கி, பழங்கள் பழுக்கத் தொடங்கின.

உலர்த்தும் பணி தீவிரம்

மேலும் விளைச்சலும் அதிகரித்ததால் காபி செடிகளில் இருந்து அறுவடைக்கு தயாரான பழங்களை விவசாயிகள் அறுவடை செய்து, அவற்றின் தோலை நீக்கி, காபி கொட்டைகளை உலர்த்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கோத்தகிரி பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து வருவதுடன், காபி செடிகளில் பழங்கள் காய்த்து குலுங்கி வருகிறது. அவற்றை அறுவடை செய்து கொட்டைகளை உலர்த்தி வருகிறோம்.

கொள்முதல் நிலையம்

கோத்தகிரி பகுதியில் காபி வாரிய அலுவலகம் இருந்தது. ஆனால் அந்த அலுவலகம் கடந்த சில வருடங்களுக்கு முன் மூடப்பட்டது. எனவே குன்னூர் காபி வாரியத்திற்கு காபி கொட்டைகளைக் கொண்டுச் சென்று விற்பனை செய்ய போக்குவரத்து செலவு ஆகும் என்பதால் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். எனவே மீண்டும் கோத்தகிரி பகுதியில் காபி வாரியம் சார்பில் கொள்முதல் நிலையம் அமைத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்