குடிபோதையில் தகராறு... தாயை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
வியாசர்பாடியில் குடிபோதையில் தாயை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
வியாசர்பாடி எம்.கே.பி.நகர் சாஸ்திரி நகரில் 11-வது தெருவில் எம்.கே.பி. நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக அங்கிருந்த பொதுமக்கள் ரோந்து பணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உஷாரான போலீஸ்காரர்கள் பாரதி மற்றும் முத்து ஆகியோர் அங்குள்ள வீட்டுக்குள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ஒரு பெண் பாட்டிலால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மயங்கி கிடந்த அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் அங்கிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் அஜய் (வயது 22) என்பதும், இவர் குடிபோதையில் தன்னை பெற்று வளர்த்த தாய் என்றும் பாராமல் அவருடன் ஏற்பட்ட தகராறில் ருக்மணி (43) என்பவரை மதுபாட்டிலால் கை,காது,முதுகு உள்ளிட்ட இடங்களிலும் குத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அஜய்யை பிடித்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.