டாஸ்மாக் பாரில் மதுகுடித்த தொழிலாளி திடீர் சாவு

டாஸ்மாக் பாரில் மதுகுடித்த தொழிலாளி திடீரென இறந்தார்.;

Update: 2023-07-11 18:54 GMT

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள அருணாச்சல கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவர் குடிநீர் கேன்களை வீடுவீடாக வினியோகம் செய்து வந்தார். இவருக்கு சுமதி (39) என்ற மனைவியும், லோகேஸ்வரன் (21), கோடீஸ்வரன் (20) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கி கொண்டு அங்குள்ள பாரில் மரத்தடியில் அமர்ந்து குடித்துள்ளார். பாரில் வேலை செய்யும் பணியாளர்கள் இவர் மரத்துக்கு அடியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருப்பது தெரியாமல் மின்விளக்கை நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை டாஸ்மாக் பணியாளர்கள் மதுபான பாருக்கு வந்து பார்த்த போது, மரத்தடியில் கண்ணன் வாந்தி எடுத்து அமர்ந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கண்ணன் மது குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த மது மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் தடயவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா? அல்லது மதுபானத்தில் வேறு ஏதேனும் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்