மதுபோதையில் தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்து குடித்த தொழிலாளி சாவு

வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் மதுபோதையில் தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்து குடித்த ெதாழிலாளியும், ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரும், விஷம் குடித்த பெண்ணும் இறந்தனர்.

Update: 2022-07-30 19:01 GMT

சோமரசம்பேட்டை, ஜூலை. 31-

வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் மதுபோதையில் தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்து குடித்த ெதாழிலாளியும், ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரும், விஷம் குடித்த பெண்ணும் இறந்தனர்.

விஷம் குடித்தார்

சோமரசம்பேட்டையை அடுத்த போசம்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலை. இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையான ராமராஜ் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்தார். சம்பவத்தன்று இவர், மது குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் படுத்து தூங்கினார்.

அப்போது, அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்படவே அருகில் இருந்த களைக்கொல்லியை (பூச்சி மருந்து) தண்ணீர் என நினைத்து குடித்தார். இதனையடுத்து தொடர்ந்து அவர் வாந்தி எடுக்கவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராமராஜ் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

கரூர் மாவட்டம் வாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமார ஜோதி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (40). உடல் நல பிரச்சினையால் அவதி அடைந்து வந்த இவர் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள அக்காள்வீட்டுக்கு வந்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சோதனை செய்தபோது, அவர் விஷம் குடித்து இருந்தது தெரியவந்தது. இதனிடையே நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் பலி

பெங்களூரு எம்.ஆர்.ஜி. பாளையம் நந்தி துர்கா ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் தனுஷ் (20). இவர் நேற்று திருச்சியில் இருந்து தஞ்சாவூர் சென்ற ரெயிலில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக தெரிகிறது.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்