மது போதையில் பீர் பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை

லத்தேரி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-12 19:18 GMT

வாலிபர் பிணம்

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி - அரும்பாக்கம் இடையே கோரைப்பட்டரை சாலை அருகில் பெட்டிக்கடை பின்புறம் ஒத்தையடி பாதையில், வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக்கண்ட கிராமத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது அருகில் உள்ள லத்தேரி பஸ்நிலையம் வரை ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.

மது குடித்தனர்

விசாரணையில் இறந்து கிடந்த ராலிபர் கோரப்பட்டரை கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி - ராமலிங்கம் ஆகியோரின் ஒரே மகன் குணசேகரன் (வயது 23) என்பதும், ஐ.டி.ஐ. படித்துள்ளதும் தெரிய வந்தது. மேலும் இவர் வெல்டிங் மற்றும் கட்டுமானப் பணியில் கம்பி கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு குணசேகரன் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை அங்கு வந்த நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பீர் பாட்டிலால் அடித்து கொலை

அவர்களில் 5 பேர் மட்டும் அதே இடத்தில் தொடர்ந்து மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் பீர் பாட்டிலால் குணசேகரன் தலை மீது ஓங்கி அடித்துள்ளார். இதனால் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. குணசேகரன் வலி தாங்காமல் அலறித் துடித்தபடி அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் 5 வாலிபர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதன்பேரில் கோரைப்பட்டரை, கலைஞர் நகரை சேர்ந்த சிம்பு என்ற பிரதாப்குமார் (வயது 21) மற்றும் 15, 16, 17 மற்றும் 18 வயது வாலிபர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்