ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை; 3 போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் கைது

ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 3 போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-03 19:24 GMT

விருத்தாசலம், 

சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று முன்தினம் இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலின் முன்பதிவு பெட்டி ஒன்றில் பயணம் செய்த 5 பேர் குடிபோதையில் இருந்தனர். அவர்கள், அதே பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டனர்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத பயணிகள், இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தார்.

தீவிர விசாரணை

இதனிடையே அந்த ரெயில் விழுப்புரத்தை தாண்டி இரவு 11.10 மணிக்கு விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு தயார் நிலையில் இருந்த விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை போலீசார் ரெயிலில் ஏறி பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 5 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து 5 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனா். அங்கு பாிசோதனை முடிந்ததும், விழுப்புரம் மற்றும் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

விசாரணையில் அவர்கள், சென்னை பாரிஸ் பி2 போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெரம்பூரை சேர்ந்த போலீஸ்காரர் மாணிக்கராஜ் (வயது 36), சென்னை ஆவடி கேம்ப்பில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் செந்தில்குமார் (41), திருவள்ளூர் சோலா நகரை சேர்ந்த என்ஜினீயர் பொன்னுசாமி (46), திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் முத்துக்குமார் (40), திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த முருகன்(54) என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 போலீஸ்காரர்கள் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்