முருங்கைக்காய் விலை கிடு, கிடு விலை உயர்வு

இடையக்கோட்டை பகுதியில் முருங்கைக்காய் விலை கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

Update: 2023-04-26 16:09 GMT

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, கோவிந்தாபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கைக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கிருந்து மார்க்கம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சந்தைகளுக்கு முருங்கைக்காய்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அந்த சந்தைகளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் முருங்கைக்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முருங்கைக்காய் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. செடி முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.12-க்கும், மரமுருங்கைக்காய் கிலோ ரூ.8-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலைவீழ்ச்சி எதிரொலியாக, கால்நடைகளுக்கு தீவனமாக முருங்கைக்காய்கள் மாறி விட்டது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து பூக்கள் உதிர்ந்ததால், முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி செடி முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.24-க்கும், மரமுருங்கைக்காய் ரூ.17-க்கும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். முருங்கைக்காய் விலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்