பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி

பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

Update: 2022-07-16 16:33 GMT

பழனி, தொப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் முருங்கை காய்கள் பறிக்கப்பட்டு மொத்த விற்பனைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் பழனி பகுதியில் உள்ள மார்க்கெட், உழவர் சந்தையில் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் வரத்து அதிகமானதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் முருங்கை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சத்திரப்பட்டி, போடுவார்பட்டி, தேவத்தூர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் முருங்கை அதிக அளவில் விளைச்சல் ஆகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ முருங்கை ரூ.30 வரை காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகமாக உள்ளதால், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10 முதல் ரூ.15 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது பறிப்புக்கூலி, வண்டி வாடகை ஆகிவற்றுக்கு கட்டுப்படி ஆகாததால், முருங்கைக்காய்களை பறிக்காமல் மரத்திலேயே விடும் சூழல் உள்ளது என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்