ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய செடி முருங்கை சாகுபடி

ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய செடி முருங்கை சாகுபடி

Update: 2022-07-11 16:20 GMT

போடிப்பட்டி,

உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடியதாக உள்ள செடி முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முருங்கை

முருங்கை மரங்கள் அந்த வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. முருங்கை தின்னா முன்னூறு நோய் அண்டாது என்ற முன்னோர் மொழி முருங்கையின் பெருமையைக் கூறுவதாக இருக்கும்.முருங்கை மரத்தின் காய்கள் மட்டுமல்லாமல் இலைகளும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவாகும்.இதுதவிர முருங்கைப் பட்டை, பிசின், விதை போன்றவையும் சிறந்த மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளது. ஆண்டு முழுவதும் முருங்கைக்காய்க்கான தேவை இருப்பதால் சீரான விலை கிடைக்கும் என்ற அடிப்படையில் உடுமலை பகுதியில் முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

'முருங்கை தற்போது லாபகரமான சாகுபடிப் பயிராக உடுமலை பகுதி விவசாயிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.முருங்கையில் மர முருங்கை, செடி முருங்கை என்று 2 வகைகள் உள்ளது.இதில் மர முருங்கை நீண்ட காலப் பயிராகும். மரத்தின் கிளைகள் மூலம் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்படும் இந்த வகை முருங்கை குறைந்த மகசூல் கொடுக்கக்கூடியது.ஆனால் 50 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது.

பல ஆண்டுகள் ஒரே பயிரை சாகுபடி செய்வதை விரும்பாத விவசாயிகளுக்குக் கைகொடுப்பது செடி முருங்கையாகும்.விதை மூலம் வளர்க்கப்படும் இது 6 முதல் 9 மாதங்களில் காய்க்க தொடங்கி விடுகிறது.ஒரு ஆண்டில் ஒரு மரத்தில் 200- லிருந்து 220 காய் வரை அறுவடை செய்யலாம்.அந்தவகையில் ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 20 முதல் 22 டன் வரை மகசூல் கிடைக்கும்.

ஊடுபயிர்

முருங்கையில் ஊடுபயிராக சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை, தட்டைப்பயறு, கொத்தமல்லி போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் வருவாய் ஈட்டலாம். முருங்கையில் ஆண் பூக்கள் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியே உள்ளதால் மகரந்தச் சேர்க்கைக்கு மகசூலில் முக்கிய இடம் இருக்கிறது.எனவே ரசாயன பூச்சி மருந்துகள் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்களை அழிக்காமல் மேற்கொள்ளப்படும் இயற்கை விவசாயம் சிறந்த மகசூல் தரக்கூடியதாக உள்ளது'என்று விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்