வீட்டில் போதை பொருட்கள் பதுக்கியஇலங்கை வாலிபர் கைது
வீட்டில் போதை பொருட்கள் பதுக்கிய இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
இலங்கையை சேர்ந்தவர் முகமது பாசில் (வயது 38). இவர் கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். அவர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை கொத்துவா பள்ளி பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இந்நிலையில் முகமது பாசில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இதுகுறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.
தீவிர குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், நம்புதாளையில் உள்ள முகமது பாசிலின் வீட்டில் திடீர் சோதனையிட்டனர்.
அவருடைய வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பாக்கெட்டுகள், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பாசிலை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.