வேன் மீது கார் மோதி மருந்து விற்பனை பிரதிநிதி பலி

வேன் மீது கார் மோதி மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-26 19:02 GMT

மருந்து விற்பனை பிரதிநிதி

திருச்சி மாவட்டம், ஒ.எப்.டி. பர்மா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). மருந்து விற்பனை பிரதிநிதியான இவர் நேற்று மதியம் துறையூரில் இருந்து சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்துவிட்டு நாமக்கல் நோக்கி ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் 13 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் துறையூர்-பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலையில் களரம்பட்டி புதிய பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, செந்தில்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிய கார், எதிரே வந்த சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா வேன் டிரைவர் நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (48) மற்றும் வேனில் பயணம் செய்த நாமக்கல் மாவட்டம், லத்துவாடியை சேர்ந்த ரமேஷ்பாபு(66), அவரது மனைவி நப்பின்னை (65), மகன் நரேன் (37), கோபாலின் மனைவி மீனாட்சி (56), பால்ராஜின் மனைவி ஐஸ்வர்யா (26), விஜயராகவனின் மனைவி ராதிகா (53), துறையூர் மகாதேவியை சேர்ந்த வரதராஜனின் மனைவி ஷ்யாம்ளா (74) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செந்தில்குமாரின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்